விருத்தாசலம் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை


விருத்தாசலம் தொழிலாளிக்கு  10 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 26 July 2021 5:05 PM GMT (Updated: 26 July 2021 5:05 PM GMT)

பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விருத்தாசலம் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

கடலூர், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள செம்பளாக்குறிச்சியை சேர்ந்தவர் மகாதேவன் மகன் விஜயன் (வயது 24). இவர் பெரியகண்டியாங்குப்பத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
விஜயன் வேலைக்கு செல்லும் போது, 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இதற்கிடையே மாணவியின் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில், விஜயன் அங்கு சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அருகில் உள்ள முந்திரி தோட்டத்திற்கு மாணவியை, விஜயன் அழைத்து சென்றுள்ளார்.

பாலியல் பலாத்காரம்

அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை மீண்டும் விஜயன் பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து மாணவி, கடந்த 26.8.2017 அன்று விஜயன் வீட்டுக்கு சென்று, அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், மாணவியை ஆபாசமாக திட்டி, மிரட்டல் விடுத்தனர். இதனால் மனவேதனை அடைந்த மாணவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மாணவி, விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 
அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயனை கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை

இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட விஜயனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகள் படி அல்லது மாநில அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம் 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

Next Story