சோலையாறு அணையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்


சோலையாறு அணையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 26 July 2021 10:35 PM IST (Updated: 26 July 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

சோலையாறு அணையில் சுற்றுலா பயணிகள் அத்துமீறுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வால்பாறை

சோலையாறு அணையில் சுற்றுலா பயணிகள் அத்துமீறுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

சோலையாறு அணை

மலைப்பிரதேசமான வால்பாறையில் சேலையாறு அணை உள்ளது. சுற்றுலா மையமான இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். 

தற்போது வால்பாறை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை தாண்டி உள்ளது. 

இதனால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. இந்த நிலையில் சோலையாறு அணை நிரம்பியது குறித்து தகவல் அறிந்த சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகிறார்கள். அவர்கள் அங்கு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். 

அத்துமீறும் சுற்றுலா பயணிகள் 

இது ஒருபுறம் இருக்க வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் வழியில் உருளிக்கல் எஸ்டேட் என்ற பகுதியில் அணை நீர்த்தேக்கம் தொடங்கி விடும். தற்போது அணை நிரம்பி இருப்பதால் அங்கு தேங்கி உள்ள தண்ணீர் கடல்போல காட்சியளிக்கிறது. 

இந்த அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் மிகுதியில், அணையின் தடுப்புச்சுவர் வழியாக நீர்த்தேக்க பகுதிக்குள் இறங்கி புகைப்படம் எடுக்கிறார்கள். குறிப்பாக சேடல்டேம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள தடுப்புச்சுவர் வழியாக அத்துமீறி உள்ளே இறங்குகிறார்கள். 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- 

கடும் நடவடிக்கை 

அணையை பார்த்து மகிழ வரும் சுற்றுலா பயணிகள், தடுப்புச்சுவர் வழியாக உள்ளே இறங்குகிறார்கள். ஆனால் அதில் இருக்கும் ஆபத்தை அவர்கள் உணருவது இல்லை. தவறி விழுந்தால் உயிர் தப்ப முடியாது. 

குறிப்பாக இளைஞர்கள் பலர் சுவர் தாண்டி ஆபத்தான முறையில் அணைக்குள் இறங்கி செல்பி எடுக்கிறார்கள். 

எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அணைப் பகுதியில்  ஆபத்தான முறையில் இறங்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முடியும். 

எனவே அதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story