ஏழை மாணவ-மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


ஏழை மாணவ-மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 26 July 2021 5:35 PM GMT (Updated: 26 July 2021 5:35 PM GMT)

தொழில் கல்வியில் ஒற்றை சாளர சேர்க்கையில் பயிலும் ஏழை மாணவ-மாணவிகள் உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்

சிவகங்கை
தொழில் கல்வியில் ஒற்றை சாளர சேர்க்கையில் பயிலும் ஏழை மாணவ-மாணவிகள் உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.இ. உள்ளிட்ட தொழில்கல்வியில் ஒற்றை சாளர சேர்க்கையில் பயிலும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு படிக்கும் காலத்தில் ஒருமுறை மட்டும் கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதி உதவிபெற விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்கள் அரசின் முகமையினால் நடத்தப்படும் ஒற்றை சாளர முறை வழியாக சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருப்பிடச் சான்று பெற்றவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் முதல் தலைமுறை பட்டதாரி கல்வி கட்டணச் சலுகை பெற்றவர்களாகவோ, கல்வி உதவி பெறும் விவசாயிகளின் மகன்கள், மகள்கள், கல்வி உதவி பெறும் பணியில் இருக்கும் ராணுவ வீரர்களின் மகன்கள், மகள்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் மகன்கள், மகள்களாக இருத்தல் கூடாது. 
தகுதியுடைய மாணவர்கள் பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், குடியிருப்பு சான்று, வருமானச்சான்று, பிறப்பிடச்சான்று, ஒற்றைச் சாளர முறையில் தேர்ந்தெடுக்கப்ட்ட ஆணை நகல், குடும்ப உறுப்பினர்கள் வயது, கல்வித்தகுதி மற்றும் வருமானம் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பங்களை தங்கள் பகுதி தாலுகா அலுவலகங்களில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
மேலும் சிவகங்கை மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சிவகங்கையில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் மையங்கள் அதிக அளவு உருவாக்கிடவும் அதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதுதவிர மத்திய, மாநில அரசுகள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. எனவே சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் படித்த ஆர்வமுள்ள இளைஞர்கள் சுயதொழில் அமைப்பதற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார்.

Next Story