மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது
என்ஜினீயரிங், அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி நேற்று தொடங்கியது.
நெல்லை:
என்ஜினீயரிங், அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி நேற்று தொடங்கியது.
மாணவர் சேர்க்கை
தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது.
நெல்லை பாளையங்கோட்டை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தின் மூலம் ஏராளமான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு அங்குள்ள ஊழியர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்தனர்.
கலைக்கல்லூரி
இதேபோல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்வதும் நேற்று தொடங்கியது. பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் மாணவிகள் தங்களது பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மைதிலி கலந்து கொண்டு ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்வதை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறும்போது, மாணவிகள் தங்களது பிளஸ்-2 மதிப்பெண் சான்று மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவற்றில் அட்டஸ்டேஷன் செய்து விண்ணப்பக்கட்டணம் ரூ.50 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவிகள் ரூ.2 கட்டணம் செலுத்த வேண்டும். கல்லூரியில் மாணவி ஒரு விண்ணப்பம் மட்டும் செலுத்தினால் போதும். ஒவ்வொரு குரூப்பிற்கும் தனித்தனி விண்ணப்பம் செலுத்த தேவை இல்லை, என்றார்.
ஆர்வம்
நேற்று முதல் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் சேர மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடைபெறும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story