நெல்லை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


நெல்லை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 27 July 2021 12:07 AM IST (Updated: 27 July 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

உரம் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

நெல்லை:
உரம் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

விவசாயிகள் முற்றுகை

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவதற்கு பதிலாக, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போட்டு செல்கின்றனர். அதன்படி நேற்று ஏராளமானவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு வழங்கினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாநில துணை தலைவர் பெரும்படையார், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமையில், நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மனு வழங்கினர்.

அதில், ‘கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை தடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறான மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள யார்கோல் அணையை அகற்ற வேண்டும். மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாட்டை நீக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

ஆக்கிரமிக்க முயற்சி

பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டம், கீழநத்தம் வடக்கூர் கிராம மக்கள் வழங்கிய மனுவில், ‘தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவில் வீடுகள் கட்டி 3 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். இந்த இடத்தை ஒருவர் ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்து இருந்தனர்.
புரட்சி பாரதம் கட்சியினர் மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமையில் வழங்கிய மனுவில், ‘களக்காடு அரசு ஆஸ்பத்திரியில் இரவுநேர டாக்டர் நியமிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

நெல்லை கருப்பந்துறை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தர்மராஜ் கொடுத்துள்ள மனுவில், ‘பாளையங்கோட்டை பகுதியில் வாரிசு சான்று, விதவை சான்று, பட்டா பெயர் மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தார்.

வீட்டுமனைபட்டா

திராவிட தமிழர் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் திருகுமரன், பொதுச்செயலாளர் கதிரவன் ஆகியோர் தலைமையில், பாளையங்கோட்டை இந்திரா நகர், பெரியார் நகர், எம்.ஜி.ஆர்.நகர், நேச நாயனார் தெரு, நம்பிக்கைநகர், மேலப்பாளையம், சமாதானபுரம், காந்திநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.

இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட தலைவர் உடையார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், ‘பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசியை தனியார் மருத்துவமனையில் இலவசமாக போட வேண்டும். மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் வழங்குவதற்கு தேவையான தானியத்தை அரசு வழங்க வேண்டும். இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

மானூர் அருகே உள்ள கீழ செழியநல்லூர் பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா நிலத்தை அளந்து தரவேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

Next Story