வீட்டில் பதுக்கி வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சு பணியிடை நீக்கம்


வீட்டில் பதுக்கி வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சு பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 26 July 2021 6:51 PM GMT (Updated: 26 July 2021 6:51 PM GMT)

கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்து சென்று வீட்டில் பதுக்கி வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சை பணியிடை நீக்கம் செய்து கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி நடவடிக்கை எடுத்தார்

கரூர்
நர்சு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அய்யனார் கோவில் அருகே வசித்து வருபவர் தனலட்சுமி (வயது 58). இவர் கரூரில் உள்ள கஸ்தூரிபாய் தாய் சேய் நல அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதையடுத்து அவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் எரியோடு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் மகேஸ்வரி தலைமையிலான மருத்துவக்குழுவினர் சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில்  95 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் அந்த தடுப்பூசிகளை பறிமுதல் செய்து தனலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். 
பணியிடை நீக்கம்
விசாரணையில், உறவினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என கூறி கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து 2 டோஸ் கோவிஷீல்டு மருந்தை கேட்டு வாங்கி வந்ததும், மற்ற டோஸ்களை யாருக்கும் தெரியாமல் அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்து வந்ததாகவும் அவர் கூறினார். மேலும் இதுவரை அவர் பலருக்கு தடுப்பூசி செலுத்தி, அவர்களிடமிருந்து பணம் வசூல் செய்து இருப்பதும் தெரியவந்தது. 
இதுகுறித்து எரியோடு மருத்துவக்குழுவினர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நர்சு தனலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து நேற்று கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உத்தரவிட்டார்.

Next Story