பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்
அம்பையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பை:
கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் பாசனத்திற்கு உட்பட்ட கடைமடை பகுதியான மன்னார்கோவில் சீர்பாதங்குளம், சுமைதாங்கி குளம், ஞானபட்டர் குளம், புதுக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை.
எனவே அந்த கால்வாயில் உள்ள அமலைச்செடிகள், கட்டிட கழிவுகள் போன்றவற்றை அகற்றி தூர்வாரி, கடைமடை குளங்களுக்கு உடனே தண்ணீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அம்பை பொதுப்பணித்துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் கணபதி பேசினார். நகர செயலாளர் சுரேஷ், நிர்வாகிகள் பகவதி, செல்லத்துரை, முருகேசன், மாயாண்டி, முருகன், சங்கரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மகேசுவரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடைமடை குளங்களுக்கு தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story