கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம்


கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 26 July 2021 7:14 PM GMT (Updated: 26 July 2021 7:14 PM GMT)

கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்தனர்.

கரூர்
கொரோனா தடுப்பூசி முகாம்
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். அந்த வகையில் நேற்று கரூர் பகுதியில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாந்தோணிமலை பாரதிதாசன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளி, தாந்தோணிமலை ஜீவா நகர், வ.உ.சி. தெரு அரசுப்பள்ளி, புதுக்குளத்துப்பாளையம் அரசுப்பள்ளி,  ராமேஸ்வரப்பட்டி அரசுப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 16 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
வெள்ளியணை
வெள்ளியணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று வர்த்தக சங்க ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில் வெள்ளியணை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கவுரி, சரவணன் மற்றும் சுகாதார நிலைய பணியாளர்கள் கலந்துகொண்டு 468 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகளை போட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வர்த்தக சங்க தலைவர் ஆறுமுகம், நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
தோகைமலை
தோகைமலை ஒன்றியம், தளிஞ்சி ஊராட்சியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். முகாமை சிறப்பு விருந்தினராக தோைகமலை தி.மு.க. கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணாதுரை கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முகாமில் விவசாயிகள், இளைஞர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். மேலும் சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்பாகவும் அனைத்து பகுதிகளிலும் பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மழைகாலம் என்பதால் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புகளூர் நடுநிலைப்பள்ளியில் ஒலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். அனைவருக்கும் காய்ச்சல் மாத்திரைகள் வழங்கப்பட்டது. 

Next Story