தென்காசி கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை


தென்காசி கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
x

குடிநீர் வசதி கேட்டு தென்காசி கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தென்காசி:
குடிநீர் வசதி கேட்டு தென்காசி கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்காக அங்கு ஒரு பெட்டி வைக்கப்பட்டு அதில் மனுக்களை போட்டு வருகின்றனர். 

நேற்றும் பொதுமக்கள் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனுக்களை பெட்டியில் போட்டனர். 

காலிக்குடங்களுடன் முற்றுகை

சங்கரன்கோவில் தாலுகா பொன்னகரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகிறோம். இங்கு நீர்த்தேக்கத்தொட்டி ஒன்று கட்டப்பட்டு, சுமார் 10 ஆண்டுகளாக தண்ணீர் ஏற்றப்படவில்லை. அதற்கு பதிலாக ஒரு சிறிய 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை வைத்தனர். அதற்கும் குடிநீர் வரவில்லை. இதனால் நாங்கள் கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகிறோம். எனவே எங்கள் ஊருக்கு குடிநீர் வசதி செய்துதர வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் சங்கம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தென்காசி மாவட்ட துணைச்செயலாளர் வேலாயுதம் கொடுத்துள்ள மனுவில், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும். மத்திய அரசின் 3 வேளாண் திட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அணைந்தபெருமாள்நாடானூர் பொதுமக்கள் சார்பில் வரதராஜன் என்பவர் கொடுத்துள்ள மனுவில், குடியிருப்பு வழியாக தனியார் கல்குவாரி மற்றும் கிரஷருக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக நடப்பட்டுள்ள உயர் மின்அழுத்த கம்பங்களை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

குற்றாலம் புனிதநீர்

இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து மற்றும் அந்த அமைப்பினர் கொடுத்துள்ள மனுவில், தென்காசி மாவட்டத்தில் உள்ள ேகாவில்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் மற்றும் வருசாபிஷேகம் போன்ற திருவிழாக்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது குற்றாலத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வரும் நிகழ்வு நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. மேலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வும் குற்றாலம் பகுதியில் நடைபெறுவது வழக்கம்.

தற்போது ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கவும், கோவில்களுக்கு புனிதநீர் எடுக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
வீரகேரளம்புதூர் தாலுகா இரட்டைகுளம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் கொடுத்துள்ள மனுவில், இரட்டைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 8 பேர் தலா ரூ.25 ஆயிரம் கடன் பெற்று உள்ளனர். அவர்கள் இதனை தவணை தவறி கட்டாமல் இருப்பது அதிகாரி ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே கடன் பெற்று சரியாக கட்டாத நிர்வாகிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story