2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கு உடல்தகுதி தேர்வு தொடங்கியது


2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கு உடல்தகுதி தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 27 July 2021 12:59 AM IST (Updated: 27 July 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கு உடல்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இந்த பணியை போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

சேலம்
சேலத்தில் ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கு உடல்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இந்த பணியை போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
உடல் தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நடந்தது. இதனை தொடர்ந்து உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக உடல் தகுதி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் நேற்று மாவட்ட தலைநகரங்களில் 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வுகள் நடந்தன. அந்த வகையில் சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை 6 மணிக்கு 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடல்தகுதி தேர்வு தொடங்கியது. இதற்காக சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 913 பேரில் தினமும் 500 பேர் வீதம் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
தொற்று இல்லை சான்றிதழ்
இந்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்க வரும் நபர்கள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் யாராவது இருந்தால் அது பற்றிய விவரத்தை தேர்வு மைய தலைவரிடம் குறிப்பிட்ட நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
முதல் நாளான நேற்று சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றனர். பின்னர் அவர்களுக்கு முதலில் கல்வி சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தன. அதன்பிறகு உடல் தகுதி தேர்வுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு உயரம், மார்பளவு சரி பார்த்தல், 100 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்டவை நடந்தன. சான்றிதழ் சரியாக இல்லாதவர்கள் மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தகுதி பெற்றவர்களுக்கு அடுத்தக்கட்ட தேர்வு குறித்தவிவரங்களை போலீஸ்அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
இதனிடையே, 2-ம் நிலை காவலர் பணிக்கு நடைபெற்று வரும் உடல் தகுதி தேர்வை மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா, சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, அவர்கள் எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் நேர்மையாக உடல் தகுதி தேர்வை நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அறிவுறுத்தினர்.
உடல் தகுதி தேர்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இந்த உடல் தகுதி தேர்வானது அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story