ஆதார் மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு
மேலூர் நகராட்சி அலுவலக ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளதால் திடீர் சாலை மறியல் நடைபெற்றது.
மேலூர், ஜூலை
மேலூர் நகராட்சி அலுவலக ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளதால் திடீர் சாலை மறியல் நடைபெற்றது.
ஆதார் சேவை மையம்
மேலூர் நகராட்சி அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தினமும் ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்காக வருகின்றனர்.
ஆனால் இங்கு ஆன்லைன் சர்வர் பிரச்சினை என்று கூறி பொதுமக்களை தினமும் திருப்பி அனுப்பியுள்ளனர். இவ்வாறு தங்களை தொடர்ச்சியாக அலைக்கழிப்பதாக கூறி நேற்று பெண்கள் கைக்குழந்தைகளுடன் நகராட்சி அலுவலகம் முன்பு மேலூர் - திருப்புவனம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டது.
தகவல் அறிந்ததும் அங்கு வந்த மேலூர் தாசில்தார் இளமுருகன், போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகர், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆதார் மையத்தில் பணியாற்றும் ஊழியர், தங்களை தினமும் திருப்பி அனுப்பி அலைக்கழிப்பதாகவும், இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
உறுதி
இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து தங்கு தடையின்றி ஆதார் சேவைகளை வழங்குவதாக மேலூர் தாசில்தார் இளமுருகன் உறுதி அளித்தார். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் மேலூர் - திருப்புவனம் ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
Related Tags :
Next Story