கூட்டுறவு சங்கங்களில் முழுவதுமாக பால் கொள்முதல் செய்யக்கோரி உற்பத்தியாளர்கள் மனு


கூட்டுறவு சங்கங்களில் முழுவதுமாக பால் கொள்முதல் செய்யக்கோரி உற்பத்தியாளர்கள் மனு
x
தினத்தந்தி 26 July 2021 8:14 PM GMT (Updated: 26 July 2021 8:14 PM GMT)

கூட்டுறவு சங்கங்களில் முழுவதுமாக பால் கொள்முதல் செய்யக்கோரி உற்பத்தியாளர்கள் மனு அளித்தனர்.

பெரம்பலூர்:

பாலை திருப்பி அனுப்புகிறார்கள்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி தலைமையில், அச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செல்லதுரை மற்றும் பால் உற்பத்தியாளர்கள், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் பால் அதிகமாக உற்பத்தியாகிறது என்று கூறி, ஆவின் நிர்வாகம் தற்போது பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை குறைவாக கொள்முதல் செய்ய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் சில கூட்டுறவு சங்கங்களில், பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வந்த பாலை திருப்பி அனுப்புகிறார்கள். இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி, உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பாலை முழுவதுமாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்ட பால் ஒன்றியத்தை தனியாக பிரித்து, பால் கொள்முதல் அளவை உயர்த்த வேண்டும். பால் கொள்முதல் செய்ய வேன்களை அதிகப்படுத்த வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
பணி வழங்கக்கோரி மனு
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணிபுரிந்த செவிலியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நாங்கள் கொரோனா 2-ம் அலையின் காரணமாக அதிக அளவிலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியில் சேர்ந்தோம். தற்போது பணியில் இருந்து நிறுத்தி விட்டனர். இந்த பணிக்கு வருவதற்காக ஏற்கனவே நாங்கள் பணிபுரிந்த தனியார் மருத்துவமனை பணியையும் கைவிட்டோம். தற்போது எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு கருணை அடிப்படையில் எங்களை அரசு மருத்துவமனையில் மீண்டும் தொடர்ந்து நிரந்தரமாக பணிபுரிய வாய்ப்பளிக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
செவிலியர்கள் உதவியாளர் பயிற்சி முடித்த பெண்கள் கொடுத்த மனுவில், நாங்கள் தற்போது தனியார் மருத்துவமனையில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறோம். எனவே கருணை அடிப்படையில் எங்களுக்கு அரசு வேலை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
சந்தன மரங்கள் திருட்டு
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவரும், ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருமான கண்ணன் கொடுத்த மனுவில், கீழக்கணவாயில் எனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி திருடிச்சென்று விட்டனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். மேலும் அருகே உள்ள நிலத்திலும் சந்தன மரங்கள் திருட்டு போயியுள்ளன. வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு பகுதியில் சந்தன மரங்கள் திருட்டு போகின்றன. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது நிலத்தில் சந்தன மரம் திருட்டு போனதற்கு இதுவரைக்கும், பெரம்பலூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே சந்தன மரங்கள் திருட்டு போவதை தடுக்க வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கலெக்டர் உத்தரவிட வேண்டும். மேலும் சிறுவாச்சூர்- வேலூர் சாலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பணை சேதமடைந்துள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். விவசாய நிலத்தில் குரங்குகள், மயில்கள், மான்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது. எனவே அவற்றை வனத்துறையினர் பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

Related Tags :
Next Story