எடியூரப்பா நீக்கத்திற்கு ஊழல் குற்றச்சாட்டுகளும் காரணமா?


எடியூரப்பா நீக்கத்திற்கு ஊழல் குற்றச்சாட்டுகளும் காரணமா?
x
தினத்தந்தி 27 July 2021 2:19 AM IST (Updated: 27 July 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி எடியூரப்பா பதவி நீக்கத்திற்கு ஊழல் குற்ற்சாட்டுகளும் காரணமாக இருக்கலாம் என்று என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு:

கட்டுமான திட்டம்

  பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவின் பேரில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்று பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பசனகவுடா பட்டீல் யத்னால், அரவிந்த் பெல்லத் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி சி.பி.யோகேஷ்வர், எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. ஆகியோர் கட்சி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்தனர்.

  எடியூரப்பாவின் குடும்பத்தினர், பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட கட்டுமான திட்ட டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.600 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக காங்கிரஸ் கூறியது. இந்த லஞ்ச பணம் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் முறையில் வங்கி மூலம் பண பரிமாற்றம் நிகழ்ந்ததாக காங்கிரஸ் கட்சி ஆதாரங்களை வெளியிட்டது.

அவர் பதவி நீக்கம்

  மேலும் பா.ஜனதாவை சேர்ந்த எச்.விஸ்வநாத் எம்.எல்.சி., நீர்ப்பாசன திட்டத்தில் ஊழல் நடைபெற்று உள்ளதாக எடியூரப்பா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து எடியூரப்பாவின் எதிர் அணியினர், முழு ஆதாரங்களை பா.ஜனதா மேலிடத்திடம் வழங்கியதாக கூறப்படுகிறது.

  இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேலிட பொறுப்பாளர் அருண்சிங் எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கேட்பதற்காக பெங்களூரு வந்தார். அப்போது அவரை சந்தித்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவாகவே கருத்துகளை தெரிவித்தனர். முதல்-மந்திரி பதவியில் அவர் நீடிக்க வேண்டும் என்று கூறினர். 3, 4 எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்று கூறினர். எடியூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும், அவர் பதவி நீக்கம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

Next Story