காரில் கஞ்சா கடத்தி சென்ற வியாபாரியை உயிரை பணயம் வைத்து பிடித்த போலீஸ் ஏட்டு


காரில் கஞ்சா கடத்தி சென்ற வியாபாரியை உயிரை பணயம் வைத்து பிடித்த போலீஸ் ஏட்டு
x
தினத்தந்தி 26 July 2021 8:52 PM GMT (Updated: 26 July 2021 8:52 PM GMT)

காரில் கஞ்சா கடத்தியவரை உயிரை பணயம் வைத்து போலீஸ் ஏட்டு பிடித்தார்

திருச்சி
திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் காரில் கஞ்சா கடத்தி செல்வதாக மாநகர போலீஸ் கமிஷனரின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நேற்று பகல் மன்னார்புரம் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை தனிப்படை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் காரை ஓட்டி சென்ற நபர் நிறுத்தாமல் வேகமாக சென்றார். உடனே அந்த காரை போலீசார் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றனர். திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் செந்தண்ணீர்புரம் அருகே கார் படுவேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது தனிப்படை போலீஸ் ஏட்டு சரவணன் மோட்டார் சைக்கிளில் இருந்து காரின் மீது ஏறி குதித்து பேனட்டை பிடித்துக் கொண்டார். ஆனாலும் அந்த நபர் காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். உடனே ஏட்டு சரவணன் அவரை காரை நிறுத்தும்படி எச்சரித்தார். ஆனாலும் அவர் நிறுத்தவில்லை.
இதனால் சரவணனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் காரின் முன்பக்க பேனட்டில் படுத்தபடியே சுமார் 2 கி.மீ. தூரம் சென்றுள்ளார். கடைசியில் சஞ்சீவி நகர் அருகே சென்றபோது சரவணன் ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்து வளைக்க கார் தடுப்பு கட்டையில் மோதி நின்றது. இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த தனிப்படை போலீசார் காரை ஓட்டி வந்த நபரை மடக்கி பிடித்தனர்.பின்னர் கீழே விழுந்ததில் காயம் அடைந்த ஏட்டு சரவணனை மீட்டு சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையே காரை ஓட்டி வந்த நபரை காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டம் ஆவூரை சேர்ந்த முகமது அனீபா (வயது 48) என்பதும், காரில் 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அனீபாவை கைது செய்தனர். மேலும் கடத்தி செல்லப்பட்ட 21 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். திருச்சியில் கஞ்சா கடத்தி சென்ற நபரை உயிரை பணயம் வைத்து சினிமா காட்சிபோல் தனிப்படை போலீஸ் ஏட்டு விரட்டி சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story