தொடர் கனமழையால் வடகர்நாடக கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன
தொடர் கனமழைக்கு கார்வார் அருகே 50 வீடுகள் இடிந்து விழுந்தன. வடகர்நாடக கிராமங்கள் தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கின்றன.
பெங்களூரு:
ஆறுகளில் வெள்ளம்
மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் எடுத்ததால், அந்த மாநில எல்லையையொட்டி உள்ள வடகர்நாடக மாவட்டங்களான பாகல்கோட்டை, யாதகிரி, ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள அணைகள், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
குறிப்பாக கிருஷ்ணா, வேதகங்கா, துத்கங்கா, சிரண்யகேஷி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களை மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் கிராமங்களில் வசித்து வரும் மக்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறார்கள்.
50 வீடுகள் இடிந்தன
இந்த நிலையில் நேற்றும் ஹாவேரி அருே கர்ஜகி கிராமத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த கிராமத்தில் ஓடும் வரதா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக 20 வீடுகள் தண்ணீரில் மூழ்கின. அந்த வீடுகளில் வசித்து வந்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா சவாடி கிராமத்தில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ராம்கவுடா சித்தகவுடா பட்டீல் (வயது 55) என்பவர் அடித்து செல்லப்பட்டார். அவரது கதி என்ன என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி நடந்து வருகிறது. பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகா கும்பாரஹள்ளி கிராமமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதுபோல யாதஹள்ளி கிராமத்திலும் 30 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மேலும் பல கிராமங்களில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
யாதகிரியில் கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவனகொப்பா-கொன்னூரை இணைக்கும் ஆற்றுப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அங்கு போக்குவரத்து சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. கடலோர மாவட்டமான கார்வாரில் பெய்து வரும் கனமழை காரணமாக கார்வார் அருகே கத்ரா பகுதியில் 50 வீடுகள் இடிந்து விழுந்தன. அந்த வீடுகளில் வசித்தவர்கள் தங்க இடம் இன்றி சிரமம் அனுபவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story