எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்திருப்பதால் கர்நாடக மக்களுக்கு எந்த லாபமும் இல்லை - சித்தராமையா பேட்டி


எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்திருப்பதால் கர்நாடக மக்களுக்கு எந்த லாபமும் இல்லை - சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 27 July 2021 2:41 AM IST (Updated: 27 July 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்திருப்பதால் கர்நாடக மக்களுக்கு எந்த லாபமும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

ஆச்சரியம் இல்லை

  கர்நாடக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;-

  முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ய இருப்பதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே நானே கூறி இருந்தேன். இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான். இதில், எந்த ஆச்சரியமும் இல்லை.

மக்களுக்கு லாபம் இல்லை

  பா.ஜனதா ஆட்சி என்றாலே ஊழல் மட்டுமே. ஊழலில் ஈடுபட்டு வந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மற்றொரு ஊழல் முதல்-மந்திரி நியமிக்கப்பட உள்ளார். மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி மக்கள் பரிதவிக்கிறார்கள். 9 பேர் இதுவரை உயிா் இழந்துள்ளனர். மழை நிவாரண பணிகளை மேற்கொள்வதில் பா.ஜனதா அரசு முழுமையாக தோல்வி அடைந்து விட்டது. இந்த சந்தர்ப்பத்தில் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதால் கா்நாடக மக்களுக்கு எந்த விதமான லாபமும் இல்லை.

  மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி, நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டது. எடியூரப்பா மட்டும் ராஜினாமா செய்தால் போதாது, பா.ஜனதா ஆட்சியே மாற வேண்டும். எடியூரப்பா, அவரது குடும்பத்தினர் ஊழலில் ஈடுபட்டு வருவதாக, அவரது கட்சியை சேர்ந்தவர்களே கூறி வருகின்றனர். பா.ஜனதா கட்சி எப்போதும் தனிப்பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றி ஆட்சிக்கு வந்ததில்லை. ஆபரேசன் தாமரை மூலமாகவே எடியூரப்பா முதல்-மந்திரியாகி இருந்தார்.
  இவ்வாறு சித்தராமையா கூறினார்.

காரணத்தை தெரிவிக்க வேண்டும்

  இதற்கிடையில், சித்தராமையா நேற்று மாலையில் தனது டுவிட்டர் பதிவில், "முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்திருக்கும் எடியூரப்பாவுக்கு வயதாகி இருப்பதாக, பா.ஜனதா மேலிடமே கூறி இருக்கிறது. தேர்தலில் தோல்வி அடைந்தால் மட்டுமே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வார்கள். தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே எடியூரப்பா ராஜினாமா செய்திருப்பதால், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

  என்றாலும், பதவியை ராஜினாமா செய்திருக்கும் எடியூரப்பாவின் அடுத்தகட்ட வாழ்க்கை பயணம் சிறப்பாக அமைய வேண்டும். அவர் நிம்மதியாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

Next Story