மாவட்ட செய்திகள்

கண் திருஷ்டி விழுந்திருப்பதாக கூறி கே.ஆர்.எஸ். அணையில் சிறப்பு பூஜை செய்த ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் + "||" + KRS Janata Dal S MLAs perform special pooja at the dam

கண் திருஷ்டி விழுந்திருப்பதாக கூறி கே.ஆர்.எஸ். அணையில் சிறப்பு பூஜை செய்த ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள்

கண் திருஷ்டி விழுந்திருப்பதாக கூறி கே.ஆர்.எஸ். அணையில் சிறப்பு பூஜை செய்த ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள்
ஸ்ரீரங்கப்பட்டணா அருகே உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு கண் திருஷ்டி விழுந்திருப்பதாக கூறி ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு பூஜை செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:

கே.ஆர்.எஸ். அணை

  கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் கிருஷ்ணராஜசாகர் எனும் கே.ஆர்.எஸ். அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டை மைசூரு மாகாராஜா 4-ம் கிருஷ்ணராஜா உடையார் தனது தங்கம், வைர ஆபரணங்களை விற்று கட்டியதாக சொல்லப்படுகிறது.

  இந்த அணையின் நீர் தான் தமிழ்நாடு-கர்நாடகம் இடையே காவிரி நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம்படி பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த இந்த அணையை சுற்றி சட்டவிரோதமாக கல்குவாரிகள் நடைபெறுவதாகவும், அங்கு வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும் மண்டியா தொகுதி எம்.பி.யும், நடிகையுமான சுமலதா அம்பரீஷ் குற்றம்சாட்டி இருந்தார்.

கடும் வார்த்தை மோதல்

  இந்த விவகாரம் தொடர்பாக அவருக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சியினருக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் கே.ஆர்.எஸ். அணையின் நடைபாதை படிக்கட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. உடனே அதிகாரிகள் அந்த பகுதியை சீரமைத்தனர்.

  அணை பகுதியில் சுவர் இடிந்ததற்கு ஒருவரின் (மறைமுகமாக சுமலதா எம்.பி.) கண் பட்டதே காரணம் என்றும், அதனால் அணைக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாகவும் ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். இதற்கு சுமலதா எம்.பி.யின் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

கண் திருஷ்டி விழுந்திருப்பதாக...

  இத்தகைய சூழ்நிலையில் மண்டியா மாவட்ட ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் ரவீந்திர ஸ்ரீகண்டய்யா, புட்டராஜூ, அன்னதானி, எம்.சீனிவாஸ், சுரேஷ் கவுடா ஆகியோர் நேற்று கே.ஆர்.எஸ். அணைக்கு வந்தனர். அவர்கள் அணையில் உள்ள காவிரி தாய் சிலை முன்பு பிரபல ஜோதிடர் பானுபிரகாஷ் சர்மா தலைமையில் சிறப்பு ஹோகம், யாகம் மற்றும் பூஜை நடத்தினர்.

  இறுதியில் அவர்கள் திருஷ்டி பூசணிக்காயை உடைத்து அணையின் 4 மூளைகளிலும் வைத்தனர். அதாவது சுமலதா எம்.பி. கண் கே.ஆர்.எஸ். அணை மீது விழுந்திருப்பதாகவும், அந்த கண் திருஷ்டி போக பரிகார பூஜை செய்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்திற்கு அறிவுரை கூற வேண்டுதல்

  பின்னர் அந்த எம்.எல்.ஏ.க்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
  கே.ஆர்.எஸ். அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என ஹோமம், பரிகார பூஜை நடத்தினோம். சிலரின் கண்கள் கே.ஆர்.எஸ். அணை மீது விழுந்துள்ளது. இந்த கண் திருஷ்டியால் அணைக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என பூஜை செய்தோம்.

  மேலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. வருணபகவான் கருணையால் விரைவில் அணை நிரம்பும். கே.ஆர்.எஸ். அணை நிரம்ப காவிரி தாயிடம் வேண்டினோம். மேகதாது திட்டத்தை எதிர்க்கும் தமிழகத்திற்கு நல்ல அறிவுரை கூறவும், மேகதாது அணை திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டியும் காவிரி தாயிடம் கோரிக்கை வைத்தோம்.
  இவ்வாறு அவர்கள் கூறினர்.