மருத்துவ மாணவர் கொலையில் மேலும் ஒருவர் கைது


மருத்துவ மாணவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 26 July 2021 10:39 PM GMT (Updated: 26 July 2021 10:40 PM GMT)

மருத்துவ கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை வண்டவாசி ரோடு முத்துநகரை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 60). இவர்களுக்கு ஜோசப் சேவியர்(25), கிறிஸ்டோபர் (20) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்தனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்தியாவுக்கு வந்திருந்தனர். இவர்களுக்கு சொந்தமாக வண்டவாசி அருகே சொந்தமான வீடு உள்ளது. தற்போது இந்த வீடு பயன்படுத்தாமல் பாழடைந்துள்ளது. நேற்று முன்தினம் அவருடைய பயன்பாடு இல்லாத வீட்டில் 7 பேர் கொண்ட கும்பல் மதுகுடித்து கொண்டு இருந்தனர். இதுபற்றி அறிந்த இருதயராஜ் தன்னுடைய 2 மகன்களுடன் அங்கு வந்து அவர்களை கண்டித்தார். 

அப்போது மதுபோதையில் இருந்தவர்கள் தகராறில் ஈடுபட்டு கத்தியால் 3 பேரையும் குத்தினர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த கிறிஸ்டோபர் சம்பவ இடத்தியேயே பரிதாபமாக இறந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோசப் சேவியர், இருதயராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..

மேலும் ஒருவர் கைது

தகவல் கிடைத்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி மற்றும் போலீசார் அங்கு ெசன்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் சிவகங்கையை அடுத்த கீழ வாணியங்குடியை சேர்ந்த மருதுபாண்டி(21), பாலாஜி(23), சிவகங்கை பொற்கை பாண்டியன் தெருவை சேர்ந்த நந்தகுமார்(20), வசந்த்(23), புதுக்குளத்தை சேர்ந்த சரவணன்(26), வாணியங்குடியை சேர்ந்த கருப்பு(22), தேவகோட்டையை சேர்ந்த அமரன் ஆனந்த் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
 இதில் மருதுபாண்டி, நந்தகுமார் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இ்ந்தநிலையில் பொற்கை பாண்டியன் தெருவை சேர்ந்த வசந்தை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Next Story