இறந்த குட்டியானையின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு


இறந்த குட்டியானையின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு
x
தினத்தந்தி 27 July 2021 4:11 AM IST (Updated: 27 July 2021 4:12 AM IST)
t-max-icont-min-icon

தாய் யானையின் பாசப்போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இறந்த குட்டியானையின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

கூடலூர்,

தாய் யானையின் பாசப்போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இறந்த குட்டியானையின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

பாசப்போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள செம்பாலா பகுதியில் கடந்த 23-ந் தேதி அதிகாலையில் சேற்றில் சிக்கி குட்டியானை உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு தாய் யானை உள்பட சில காட்டுயானைகள் நின்றிருந்தது. மேலும் வனத்துறையினரை விரட்டியது. மழையும் பெய்து கொண்டு இருந்ததால், அந்த பகுதி சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் திரும்பி வந்துவிட்டனர்.

அதன்பின்னர் அங்கு நேற்று முன்தினம் மீண்டும் வனத்துறையினர் சென்றனர். அப்போதும் குட்டியானையின் உடலை எடுக்க விடாமல் தாய் யானை பாசப்போராட்டம் நடத்தியது. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

உடல் மீட்பு

இந்த நிலையில் அங்கு நேற்று 3-வது நாளாக வனச்சரகர் கணேசன் தலைமையில் வனவர் சுபேத், வனக்காப்பாளர் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர், கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் மற்றும் மருத்துவ குழுவினர் சென்றனர். 

அப்போது குட்டியானையின் உடலை விட்டு நீண்ட தொலைவில் தாய் யானை சோகத்துடன் நின்றிருந்தது. அதன் பாசப்போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், 2 நாட்களுக்கு பிறகு குட்டியானையின் உடலை சேற்றில் இருந்து கயிறு கட்டி வனத்துறையினர் மீட்டனர்.

மூச்சுத்திணறல்

இதை கண்ட தாய் யானை வனத்துறையினரை நோக்கி வந்தது. உடனே அவர்கள் அதை விரட்டினர். தொடர்ந்து குட்டியானையின் உடலை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அதே பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சேற்றில் சிக்கி உயிரிழந்த ஆண் குட்டி யானைக்கு 1 வயது இருக்கும். தண்ணீரில் நீண்ட நேரம் நின்றதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்து உள்ளது என்றனர்.


Next Story