வாகனங்களை துரத்திய காட்டுயானையால் பரபரப்பு


வாகனங்களை துரத்திய காட்டுயானையால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 July 2021 10:51 PM GMT (Updated: 26 July 2021 10:51 PM GMT)

மசினகுடி அருகே வாகனங்களை துரத்திய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்

மசினகுடி அருகே வாகனங்களை துரத்திய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.

வாகனங்களை துரத்தியது

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு(வெளிமண்டலம்) உட்பட்ட மசினகுடி, மாவனல்லா, வாழைதோட்டம், மாயார் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளதால், அங்குள்ள சாலைகளில் காட்டுயானைகள் சுதந்திரமாக உலா வருகின்றன.

இந்தநிலையில் மசினகுடியில் இருந்து ஆனைகட்டிக்கு செல்லும் சாலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு காட்டுயானைகள் முகாமிட்டு இருந்தது. அதில் ஒரு யானை சாலையின் நடுவில் நடந்து சென்றது. அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை திடீரென துரத்த தொடங்கியது. 

பரபரப்பு

இதை கண்ட டிரைவர்கள் தங்களது வாகனங்களை பின்நோக்கி வேகமாமக இயக்கினர். சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு துரத்தி வந்த காட்டுயானை, அதன்பிறகு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, கொரோனா பரவல் காரணமாக வாகன போக்குவரத்து குறைந்து, முதுமலையில் உள்ள சாலைகள் வெறிச்சோடி கிடந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் வாகனங்களை காட்டுயானைகள் துரத்தும் சம்பவங்கள் நடக்கிறது என்றனர். மேலும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

அட்டகாசம்

இதேபோன்று நேற்று முன்தினம் இரவில் அத்திசால், பாதிரிமூலா பகுதியில் 5 காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து பொதுமக்களின் குடியிருப்புகளை விடிய விடிய முற்றுகையிட்டன. 

தொடர்ந்து மேரி, நாகேந்திரன் ஆகியோரது தோட்டங்களில் பயிரிட்டு இருந்த வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் விரைந்து சென்று, பொதுமக்கள் உதவியுடன் காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.


Next Story