கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதியவர்களுக்கு முன்னுரிமை


கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதியவர்களுக்கு முன்னுரிமை
x
தினத்தந்தி 26 July 2021 10:51 PM GMT (Updated: 26 July 2021 10:51 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பூசி

நீலகிரி மாவட்டத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா தடுப்பூசி வந்தது. இதை தொடர்ந்து அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வார்டு, வாரியாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

அதன் அடிப்படையில் மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனால் டோக்கன் பெறாதவர்களும் தடுப்பூசி போட வருவதால் கூட்டம் அலைமோதுவதோடு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிப்பது கேள்விக்குறியானது. அதனால் தொற்று பரவும் அபாயம் காணப்படுகிறது.

டோக்கன் முறை ரத்து

இந்த நிலையில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களில் முதலில் வந்து வரிசையில் நிற்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து போடப்படுகிறது. அதன்படி நேற்று முதல் டோக்கன் இல்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊட்டியில் பிரிக்ஸ் பள்ளி உள்பட 3 பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

இங்கு ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மொத்தம் 1000 டோஸ் ஒதுக்கப்பட்டு இருந்தது. காலை 8 மணி முதலே பள்ளிகளுக்கு வந்து பொதுமக்கள் காத்திருந்தனர். 10 மணிக்கு மேல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

முதியவர்களுக்கு முன்னுரிமை

கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களில் பொதுமக்களிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தினமும் 2,500 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மையங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, மையங்களுக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளில் முதல் மற்றும் 2-ம் தவணைகளில் தலா 50 சதவீதம் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோர் டோக்கன் இன்றி நேரடியாக மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றார்.


Next Story