போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி 18 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது


போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி 18 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 July 2021 12:01 PM IST (Updated: 27 July 2021 12:01 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி 18 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் நடுகுத்தகை பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மகன் பார்த்தசாரதி (வயது 21). இவர் கடந்த 2020-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.

இதையறிந்த திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் காலனியை சேர்ந்த அரவிந்தன் (25) என்பவர் பார்த்தசாரதியை நாடி தான் திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக கூறி தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து சில நாட்கள் கழித்து அவர் பார்த்தசாரதியை செல்போனில் தொடர்பு கொண்டு எழுத்துத் தேர்வில் நீங்கள் தேறவில்லை என்று கூறினார். இதனால் மனவேதனை அடைந்த பார்த்தசாரதி தனக்கு எப்படியாவது வேலை வாங்கி தரவேண்டுமென வேண்டினார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அரவிந்தன், திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

போலீசில் புகார்

மேலும் இதற்காக ரூ.5 லட்சம் தனக்கு கொடுத்தால் உடனடியாக பணி நியமன ஆணை பெற்று தருவதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து பார்த்தசாரதி அவரிடம் ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 207 கொடுத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட அரவிந்தன் சில நாட்களுக்கு முன்பு பார்த்தசாரதிக்கு போலியான பணி நியமன ஆணையை தயார் செய்து கொடுத்தார். அந்தப் பணி நியமன ஆணையை கொண்டு அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று காண்பித்த போது அது போலியான பணி நியமன ஆணை என தெரியவந்தது.

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அரவிந்தன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின்பேரில், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லில்லி, சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் பிரபாகர் தாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அரவிந்தனை தேடிவந்தனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

அவரிடமிருந்து அரசு விண்ணப்ப படிவங்கள், போலி சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதில் 2020-ம் ஆண்டு தமிழக ஊர்க்காவல் படையில் பணிக்கு சேர அரவிந்தன் விண்ணப்பித்து இருந்ததாகவும், அது சம்பந்தமாக அடிக்கடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அவர் வந்தபோது அலுவலக ஊழியர்கள் சில பேரிடம் பழக்கம் ஏற்பட்டதும், அப்பழக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தவறான வழியில் பயன்படுத்தி போலீஸ் வேலை வாங்கி தருவதாக 18 பேரை ஏமாற்றி அவர் ரூ.10 லட்சத்திற்கு மேலாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

Next Story