கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாகையில், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாகையில், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 July 2021 5:35 PM IST (Updated: 27 July 2021 5:35 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாகையில், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

கர்நாடக அரசு ேமகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சரபோஜி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாபுஜி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தமீம் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை இடிக்க வேண்டும். 2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும்.

நிபந்தனையின்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் வழங்க வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக கலெக்டர் அலுவலகம் அருகே இரும்பு தடுப்புகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு விவசாய சங்கத்தினர் திரண்டு நின்று கோஷங்கள் எழுப்பி கொண்டு இருந்தனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். அலுவலக பணி பாதிக்கப்படும். எனவே அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும்படி தெரிவித்தனர். இதில் போலீசாருக்கும், விவசாய சங்கத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிலர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங்கிருந்து விவசாய சங்கத்தினர் கலைந்து சென்றனர்.

Next Story