மாவட்ட செய்திகள்

காட்டு யானையால் பொதுமக்கள் பீதி + "||" + Public panic over wild elephant

காட்டு யானையால் பொதுமக்கள் பீதி

காட்டு யானையால் பொதுமக்கள் பீதி
கொடைக்கானல் அருகே பகலில் உலா வரும் காட்டு யானையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை, அஞ்சுவீடு, புலியூர், கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளன. இதில் காட்டு யானை ஒன்று, கூட்டத்தை விட்டு பிரிந்து மலைக்கிராமங்களுக்குள் புகுந்து விட்டது. அந்த யானை அடிக்கடி வீடுகளையும், வேளாண் பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது.
 
குறிப்பாக பகல் நேரத்தில் எந்தவித பதற்றமும் இன்றி சர்வசாதாரணமாக மலைக்கிராமங்களில் உலா வருகின்றன. இதனை கண்டு பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு பேத்துப்பாறை கிராமத்துக்கு செல்லும் சாலையில் உள்ள பிரான்சிஸ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை அங்கு பயிரிட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது. அதன்பிறகு அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ஒற்றை யானையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

 மேலும் குடியிருப்பு மற்றும் தோட்டத்துக்குள் காட்டு யானை புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.