வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத 141 மாணவர்கள் விண்ணப்பம்
அதிக மதிப்பெண் பெறுவதற்காக வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத 141 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர்
அனைவரும் தேர்ச்சி
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. மேலும் அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வில் இருந்து 70 சதவீதமும், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதமும் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 9 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
141 மாணவ- மாணவிகள்
இந்த தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் எழுத்து தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அரசு தேர்வுத் துறை சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தனித்தேர்வு மற்றும் மதிப்பெண் பெற தேர்வு (துணைத்தேர்வு) எழுதுவதற்கு விண்ணப்பித்து வந்தனர். கடைசி நாளான நேற்று வரை வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 துணை தேர்வு எழுதுவதற்கு 141 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்கள் பிளஸ்-2 அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுத வேண்டும். தற்போது எழுத உள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது.
விண்ணப்பிக்க தவறிய தேர்வர்கள், சிறப்பு அனுமதி (தட்கல்) திட்டத்தில் இன்று ஆன்லைனில் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.1,000 வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story