ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜீவன்ரக்சா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ஜீவன்ரக்சா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மத்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன் ரக்சா பதக்க விருதுகள் வழங்கி வருகிறது.
சர்வோத்தம் ஜீவன் ரக்சா பதக்கம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு வழங்கப்படும். உத்தம் ஜீவன் ரக்சா பதக்கம் துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஜீவன் ரக்சா பதக்கம் தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும். அதன்படி ஜீவன் ரக்சா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2021-ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்சா பதக்க விருதிற்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.
கடந்த 1.10.2019-ந் தேதி முதல் தற்போது வரையிலான காலத்திற்குள் ஆற்றிய சேவை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். முந்தைய வீரதீர சாதனைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஆகையால் குறித்த காலத்திற்கு உண்டான சாதனைகளை மட்டுமே அனுப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி ஆகும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
----
Reporter : A. SUBARAJ_Staff Reporter Location : Vellore - RANIPET DEPOT
Related Tags :
Next Story