வைகை அணையில் மீன்பிடி உரிமத்தை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும் மீனவர்கள் கோரிக்கை


வைகை அணையில்  மீன்பிடி உரிமத்தை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும் மீனவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 July 2021 1:57 PM GMT (Updated: 27 July 2021 1:57 PM GMT)

வைகை அணையில் மீன்பிடி உரிமத்தை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. வைகை அணை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் 70 பரிசல்களில் நீர்தேக்கத்தில் மீன்கள் பிடித்து வருகின்றனர். இந்த மீன்பிடி தொழில் வைகை அணை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் நடைபெறுகிறது. மீனவர்கள் பிடிக்கும் மீன்களில் சரிபாதி மீன்வளத்துறைக்கும், மீதமுள்ளவற்றை மீனவர்களும் பங்கு அடிப்படையில் பகிர்ந்து கொள்கின்றனர். 
இதில் மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் ஒரு கிலோ ரூ.120-க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் வைகை அணையில் மீன்பிடிக்கும் உரிமத்தை தனியாருக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், மீன்பிடி உரிமையை தனியாருக்கு கொடுக்க கூடாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். 
இந்நிலையில் வைகைஅணையில்  மீனவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. இதில் அணை மீன்பிடி உரிமையை தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிடவேண்டும். மீன்பிடிப்பதில் தற்போது உள்ள நடைமுறையே தொடரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், மீன்வளத்துறையால் மீன்பிடி நடத்த முடியாவிட்டால், மீன்பிடி உரிமத்திற்கு அரசு நிர்ணயம் செய்யும் தொகையினை மீனவர்கள் சங்கம் மூலம் செலுத்த தயாராக உள்ளோம். எனவே மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி மீன்பிடி உரிமத்தை  சங்கத்திற்கே வழங்க வேண்டும் என்றனர்.



Next Story