குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
சிறுகுடி அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செந்துறை:
நத்தம் அருகே குட்டுப்பட்டி, ஒத்தினிப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் வழியாக சிறுகுடி செல்லும் சாலை உள்ளது. அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அந்த சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா மினி கிளினிக் ஆகியவற்றுக்கு செல்வதற்கு சுற்று வட்டார கிராம மக்கள் அந்த சாலையை தான் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் ஒத்தினிப்பட்டியில் இருந்து மஞ்சநாயக்கன்பட்டி வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போய் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
தற்போது மழை பெய்து வருவதால், சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டை போல காணப்படுகிறது.
மேலும் அந்த சாலை வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ள அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் கிணற்றில் போடப்பட்ட கல்லைப்போல அந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் புரியாத புதிராகவே உள்ளது.
எனவே பழுதடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Related Tags :
Next Story