550 கிலோ குட்கா பறிமுதல் 3 பேர் கைது
550 கிலோ குட்கா பறிமுதல் 3 பேர் கைது
கருமத்தம்பட்டி
கோவையை அடுத்த சூலூர் சுற்றுவட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சோமனூர் அருகே மயான பகுதியில் கருமத்தம்பட்டி போலீஸ் சப்-இஸ்பெக்டர் அழகேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 பைகளுடன் வந்த வட மாநில வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் அந்த பைகளில் குட்கா பாக்கெட்டுகளை விற்பனைக்காக கொண்டு செல்வது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜித்தேந்திர குமார் (வயது24) என்பதும், அந்த பொருட்களை அதே பகுதியில் உள்ள குடோனில் இருந்து எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அதிரடியாக அந்த குடோனுக்கு சென்றனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 550 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அந்த குடோன் சோமனூரில் உள்ள மகா சிவசக்தி ஜெனரல் ஸ்டோர்ஸ் உரிமையாளருக்கு சொந்தமானது என்பதும் அதன் உரிமையாளர் மோதிலால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குட்கா பொருட்களை பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பதும் தெரியவந்தது.
மேலும் அந்த குடோனில் வேலை பார்த்து கொண்டிருந்த உத்தம்குமார் (21), பிரேம் சிங் (20) மற்றும் ஜித்தேந்திர குமார் (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story