தஞ்சையில் 2-ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது


தஞ்சையில் 2-ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது
x

தஞ்சையில் 2-ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது. முதல்நாளில் 392 பேர் பங்கேற்றனர். 108 பேர் வரவில்லை.

தஞ்சாவூர்,

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர்களுக்கான பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. 2-ம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள், தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்காக இந்த எழுத்துத்தேர்வு நடந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக உடற்தகுதி தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்படி நிறுத்தி வைக்கப்பட்ட உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்ற தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு உடற்தகுதி தேர்வு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. இந்த தேர்வில் கொரோனா விதிதுறைகள் பின்பற்றப்பட்டு ஒரு நாளைக்கு 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி முதல்நாளான நேற்று தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 500 பேருக்கு உடற்குதி தேர்வில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. கொரோனா பரிசோதனை சான்று முக்கியம் என்பதால் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க வந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருந்தனர். கொரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டும் அதற்கான சான்றுகளுடன் பங்கேற்றனர்.

500 பேரில் 392 பேர் மட்டுமே உடற்தகுதி தேர்வில் பங்கேற்றனர். 108 பேர் பல்வேறு காரணங்களால் வரவில்லை. மற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. மேலும் அவர்களது உயரம், மார்பளவு சரிபார்க்கப்பட்டதுடன் 1,500 மீட்டர் ஓட்டப்போட்டியும் நடத்தப்பட்டது. 7 நிமிடத்தில் 1,500 மீட்டர் ஓட்டத்தை கடந்தவர்கள் மட்டுமே அடுத்தகட்ட தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். உடற்தகுதி தேர்வு தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.

ஆயுதப்படை மைதானத்தில் 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, உடற்தகுதி தேர்வு கண்காணிக்கப்பட்டது. மேலும் 15 வீடியோ கேமராக்கள் மூலமாகவும் போலீசார், உடற்தகுதி தேர்வை பதிவு செய்தனர். உயரத்தை அளவீடு செய்யும்போது சில பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க டிஜிட்டல் முறையில் உயரம் சரிபார்க்கப்பட்டது. இந்த தேர்வையொட்டி 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் உடற்தகுதி தேர்வையொட்டி தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Next Story