தஞ்சையில் காதலுக்கு இடையூறாக இருந்த காவலாளி சரமாரி வெட்டிக்கொலை - பெண்ணின் காதலர், நண்பருடன் கைது
தஞ்சையில், காதலுக்கு இடையூறாக இருந்த காவலாளியை சரமாரியாக வெட்டிக்கொன்ற பெண்ணின் காதலரையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் சந்தோஷ்(வயது23). டிரைவரான இவர் தஞ்சையை அடுத்து உள்ள பிள்ளையார்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதனால் காதலியை சந்திப்பதற்காக அடிக்கடி பிள்ளையார்பட்டிக்கு சந்தோஷ் சென்று வந்தார்.
வேறொரு ஏரியாவை சேர்ந்த ஒருவர், தங்களது பகுதி பெண்ணை சந்தித்து பேசுவதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கு இது பிடிக்கவில்லை. இந்த நிலையில் காதலர்கள் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டு இருந்ததை அதே ஊரைச் சேர்ந்தவரும், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தவருமான செல்வநாதன்(38) என்பவர் பார்த்து கண்டித்துள்ளார்.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் அவர்களும் செல்வநாதனிடம் தெரிவித்து இந்த காதல் விவகாரத்தை கண்டிக்குமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து செல்வநாதன் அடிக்கடி சந்தோசிடம் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு சில நேரங்களில் கைகலப்பாகவும் மாறியது.இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், தனது காதலுக்கு இடையூறாக உள்ள செல்வநாதனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் இரவு சந்தோஷ், தனது நண்பரான பர்மா காலனியை சேர்ந்த ரமேஷ் மகன் அமரேஷ்(23) ஆகிய இருவரும் சேர்ந்து, செல்வநாதனிடம் செல்போனில் பேசினர்.
அப்போது சந்தோஷ், தான் காதலிக்கும் பெண்ணை விட்டு விலகி விடுவதாக செல்வநாதனிடம் கூறியதோடு தன்னுடன் சேர்ந்து மது குடிக்க வருமாறு அழைத்துள்ளார். இதை உண்மை என நம்பிய செல்வநாதன், சந்தோஷின் அழைப்பை ஏற்று விளார் பைபாஸ் சாலை பகுதிக்கு சென்றார்.
அங்கே ஏற்கனவே காத்திருந்த இருவரும் பைபாஸ் சாலை அருகே உள்ள தங்கும் விடுதிக்கு பின்புறமுள்ள திடலுக்கு செல்வநாதனை அழைத்து சென்றனர். அங்கு 3 பேரும் சேர்ந்து மது அருந்தினர்.
மது அருந்தியதால் போதை ஏறியவுடன் மயக்க நிலையில் இருந்த செல்வநாதனை சந்தோஷ், அமரேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் சம்பவ இடத்திலேயே செல்வநாதன் பலியானார். அவர் இறந்து விட்டதை உறுதி செய்த பிறகு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பின்னர் சந்தோஷ், அமரேஷ் ஆகிய இருவரும் விளார் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்து, செல்வநாதனை கொலை செய்த விவரத்தை தெரிவித்தனர். உடனே அவர், சரண் அடைந்த இருவரையும் தஞ்சை தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தார்.இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் கொலை நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து செல்வநாதன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ், அமரேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் இவர்களுடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story