பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு


பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 27 July 2021 9:32 PM IST (Updated: 27 July 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

பேரறிவாளனுக்கு 3-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜோலார்பேட்டை

ராஜீவ்காந்தி கொலை வழக்கு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த பேரறிவாளன் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

எனவே மருத்துவ சிகிச்சைகளுக்காக பேரறிவாளனுக்கு பரோல் வழங்க அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்-அமைச்சரிடம் மனு அளித்தார். 
அதன்படி பேரறிவாளனுக்கு கடந்த மே மாதம் 28-ந் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் காவலுடன் பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார். ஜூன் மாதம் 28-ம் தேதி பரோல் முடிந்து புழல் சிறைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு மீண்டும் 30 நாள் பரோல் வழங்கியது இதனால் பாதி வழியிலேயே மீண்டும் பேரறிவாளன் வீட்டிற்கு திரும்பினார்.

3-வது முறையாக...

இதனையடுத்து விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது இன்றுடன் (புதன்கிழமை) தமிழக அரசு வழங்கிய பரோல் காலம் முடிகிறது. இதனையடுத்து மீண்டும் புழல் சிறைக்கு செல்ல இருந்த நிலையில் 3-வது முறையாக பரோலை நீட்டிக்க அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார். இதனையடுத்து 3-வது முறையாக மேலும் 30 நாட்கள் பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் வழங்கி நேற்று உத்தரவிட்டது.

இன்று (புதன்கிழமை) பரோல் முடிந்து புழல் சிறைக்கு செல்ல இருந்த பேரறிவாளன் 3-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டதையடுத்து வீட்டிலேயே தங்கி உள்ளார். இங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் காவல் காத்து வருகின்றனர்.

Next Story