தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவ கிராமங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தும் மீனவ கிராமங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை அக்கரைப்பேட்டையில் நடந்த 3 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெளிப்பாளையம்:
தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தும் மீனவ கிராமங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை அக்கரைப்பேட்டையில் நடந்த 3 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள நம்பியார் நகர், பூம்புகார், சந்திரபாடி, மடவாய்மேடு, திருமுல்லைவாயல் உள்ளிட்ட கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் கிராமங்களுக்கு எதிராகவும், மத்திய அரசின் புதிய மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்திற்கு எதிராகவும் நாகை அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள 54 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
54 கிராம மீனவர்கள்
கூட்டத்திற்கு அக்கரைப்பேட்டை மீனவ கிராம பஞ்சாயத்தார் தலைமை தாங்கினர். இதில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 54 கிராம மீனவர்கள் கலந்து கொண்டனர்.
இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்கள் தங்களது படகுகள் பாதுகாப்பாக நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைத்து இருந்தனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தும் மீனவ கிராமங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 3 மாவட்ட கலெக்டர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் மாநில அளவில் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டும் வரை மீனவ கிராமங்கள் மற்றும் துறைமுகங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது, வலைகளை அளப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. சிறு தொழில்கள் பாதிக்காத வகையில் அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் கிராம முக்கிய நிர்வாகிகள் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Related Tags :
Next Story