ரேஷன் கடையில் பருப்பு வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
தியாகதுருகம் அருகே ரேஷன் கடையில் பருப்பு வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்தனர். நேற்று அத்தியாவசிய பொருட்களை வாங்க ரேஷன் கடைக்கு சென்ற போது கடை விற்பனையாளர் கட்டிமுத்து இந்த மாதம் பருப்பு வரவில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேஷன் கடை எதிரே உள்ள கள்ளக்குறிச்சி- கூத்துக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்துபாதிப்பு எற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரேஷன் கடையில் கடந்த 2 மாதமாக பருப்பு வழங்கவில்லை எனவும், அரிசி தரமற்றதாக உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதற்கு சம்பந்தப்பட்ட குடிமைப்பொருள் தாசில்தாரிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள்மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ரேஷன் கடையில் பருப்பு வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story