போலீஸ் போல் நடித்து ஆசிரியையிடம் 12 பவுன் நகை பறிப்பு


போலீஸ் போல் நடித்து ஆசிரியையிடம் 12 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 27 July 2021 10:17 PM IST (Updated: 27 July 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போலீஸ் போல் நடித்து ஆசிரியையிடம் 12 பவுன் நகையை மர்மநபர் பறித்துச் சென்றார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்போல் நடித்து ஆசிரியையிடம் 12 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆசிரியை

தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி ஷீபா ஜோசப் (வயது 54). இவர் பண்ணைவிளையில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் இவர் தூத்துக்குடி கந்தசாமிபுரம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த பகுதியில் உள்ள ஒரு ஆலயம் அருகே அவர் சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் ராணுவ வீரர்கள் அணியக்கூடிய பச்சை நிற தொப்பியை அணிந்து இருந்தார். அவர்கள் ஷீபா ஜோசப் மற்றும் அந்த பகுதியில் நடந்து சென்ற மற்றொரு நபரை தடுத்து நிறுத்தினர். 

போலீஸ் இன்ஸ்பெக்டர் 

பின்னர் பச்சை தொப்பி அணிந்திருந்த நபர் தன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று அறிமுகம் செய்து கொண்டு, நிறுத்தி வைத்த மற்றொரு நபரிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசி உள்ளார். அப்போது நகையை அணிந்து கொண்டு இதுபோன்று நடந்து செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
இதனால் அந்த நபர் தான் அணிந்து இருந்த தங்கச்சங்கிலியை கழற்றி பையில் வைத்துக் கொண்டார். அதன்பிறகு அவரை மர்மநபர்கள் அங்கிருந்து அனுப்பி விட்டனர்.

12 பவுன் பறிப்பு

பின்னர் ஷீபா ஜோசப்பை பார்த்து, ஏன் இவ்வளவு நகையை போட்டுக்கொண்டு செல்கிறீர்கள், எங்கு செல்கிறீர்கள் என்று சரமாரியாக ஆங்கிலத்தில் கேள்விகளை கேட்டு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் அவர்களை உண்மையான போலீஸ் என்று நம்பிய ஷீபா ஜோசப், தான் அணிந்து இருந்த 2 தங்கச்சங்கிலி, ஒரு ஜோடி வளையல் உள்ளிட்ட 12 பவுன் நகைகளை கழற்றினார். பின்னர் அவற்றை தன்னுடைய கைப்பைக்குள் இருந்த சிறிய மணிபர்சை எடுத்து உள்ளே வைத்தார். அதன்பிறகு ஷீபா ஜோசப்பை அங்கிருந்து செல்லும்படி கூறி அனுப்பி விட்டனர். 
அவர் அங்கிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும், தனது பையில் வைத்த நகைகளை பார்த்தார். அப்போது அவை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் மர்மநபர்கள் தன்னிடம் போலீசார் போல் நடித்து நகைகளை நூதன முறையில் பறித்து சென்றது அவருக்கு தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து அவர் தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப்பதிவு செய்து, ஆசிரியையிடம் நூதன முறையில் நகைகளை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து உள்ளனர். மேலும் ஷீபா ஜோசப்புடன் சேர்த்து நிறுத்தி விசாரிக்கப்பட்ட மற்றொரு நபரும் வழிப்பறி கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story