விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை


விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 27 July 2021 4:50 PM GMT (Updated: 27 July 2021 4:50 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

சமூக இடைவெளி

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பின்பற்றிட வேண்டும். 

மேலும் பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சார வாரியம், செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து அவரவருக்கு வழங்கியுள்ள பணிகளை மேற்கொண்டு விழா சிறப்பாக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பான முறையில்

முன்னதாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக இடைவெளியினை கடைபிடித்து முக கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் கை கழுவும் திரவம், கிருமி நாசினி உள்ளிட்டவைகளை பயன்படுத்த வேண்டும். துறை அலுவலர்கள் இதனை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story