சுவர் ஏறி குதித்து ஓட்டல் அதிபர் மனைவி மகளை கத்தியால் குத்திய வாலிபர்


சுவர் ஏறி குதித்து ஓட்டல் அதிபர் மனைவி மகளை கத்தியால் குத்திய வாலிபர்
x
தினத்தந்தி 27 July 2021 10:21 PM IST (Updated: 27 July 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

காதல் மனைவியை பிரித்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர், மனைவியின் பெற்றோரை வீ்ட்டின் சுவர் ஏறிக்குதித்து கத்தியால் குத்தினார். மாடியிலிருந்து குதித்து தப்ப முயன்றபோது மின்வயரில் உரசி தூக்கி வீசப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குடியாத்தம்
காதல் மனைவியை பிரித்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர், மனைவியின் பெற்றோரை வீ்ட்டின் சுவர் ஏறிக்குதித்து கத்தியால் குத்தினார். மாடியிலிருந்து குதித்து தப்ப முயன்றபோது மின்வயரில் உரசி தூக்கி வீசப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரபரப்பான இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

ஓட்டல் அதிபர்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 60). இவர் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சசிகலா (48). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இதில் 2 மகள்கள் திருமணமாகி கணவர்களுடன்  குடியாத்தத்தில் வசித்து வருகின்றனர். மூன்றாவது மகள் மோனிஷா (23)பெற்றோருடன் இருந்து வந்தார்.

காதல் திருமணம்

இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் காமாட்சி 
அம்மன் பேட்டை பவளகார தெருவில் வசித்து வந்தனர். அதே தெருவில் குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் நகைக்கடை வைத்துள்ள ரவி என்பவரின் வீடு உள்ளது.

இவரது மகன் முகேஷ் (27) வேலூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சந்திரசேகரின் மூன்றாவது மகள் மோனிஷாவும் முகேசும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த சந்திரசேகர் தனது வீட்டை வீரசிவாஜி தெருவுக்கு மாற்றி சென்று விட்டார்.

கடந்த ஜனவரி மாதம் மோனிஷாவை வேலூரில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்து முகேஷ் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மகளை அழைத்து வந்தனர்

இதனை அறிந்த சந்திரசேகர், மனைவி சசிகலா ஆகியோர் தங்கள் மகளை அழைத்து வந்துவிட்டனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு மோனிஷாவை முகேஷ் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மேனிஷாவிற்கு போன் செய்த சந்திரசேகரன், அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என கூறியதன் பேரில் மீண்டும் பெற்றோர் வீட்டிற்கு மோனிஷா வந்துவிட்டார்.

இப்பிரச்சினை தொடர்பாக குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த முகேஷ், தனது மனைவி மோனிஷாவை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறியிருந்தார்.
பிரித்து அனுப்பிய மகளிர் போலீசார்

அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் மோனிஷா மற்றும் முகேஷ் ஆகியோரிடம் இனி எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது. அவரவர் வேலையை பார்க்க வேண்டும் என இருவருக்கும் அறிவுரை கூறி மோனிஷாவை அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு புகார் கொடுத்தபோதும் தன்னை மிரட்டி அனைத்து மகளிர் போலீசார் மனைவியை பிரித்து விட்டனரே என மனவருத்தத்துடன் முகேஷ் சென்றுவிட்டார்.

கடுமையான விரக்தியில் இருந்த முகேஷ் நேற்று அதிகாலை கத்தியுடன் ேமானிஷா வீட்டிற்கு புறப்பட்டார். அங்கு பின்பக்கம் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார். 
முகேசை பார்த்த சந்திரசேகர் கூச்சலிட்டு உள்ளார். அப்போது ஆத்திரமடைந்த முகேஷ் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். தடுத்த அவரது மனைவி சசிகலா, பிரசவத்திற்காக தாய் வீட்டிற்க்கு வந்திருந்த இரண்டாவது மகள் (மைத்துனி) கவுரியையும் சரமாரியாக குத்தி உள்ளார். இவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.
மேலிருந்து குதித்தார்
இதனையடுத்து தப்ப முயன்று ஓடிய முகேஷ் அந்த வீட்டின் மாடியில் மேல் ஏறி குதித்துள்ளார். அப்போது மின் கம்பியில் பட்டு தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். 

ரத்த வெள்ளத்தில் இருந்த சந்திரசேகர், மனைவி சசிகலா, கர்ப்பிணி கவுரி மற்றும் தப்ப முயன்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் காயம் அடைந்த முகேஷ் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டவுடன் மேல் சிகிச்சைக்காக சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி சசிகலா ஆகியோரை சென்னை தனியார் மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். முகேசும் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் குவிந்தனர்

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கும் மற்றும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும் சென்று தீவிர விசாரணை நடத்தினர் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் இருதரப்பு உறவினர்களும் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு இடையே மோதல் ஏற்படாமல் இருக்க மருத்துவமனை வளாகத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story