குன்னூரில் வீட்டுக்குள் விழுந்த காட்டெருமை


குன்னூரில் வீட்டுக்குள் விழுந்த காட்டெருமை
x
தினத்தந்தி 27 July 2021 4:57 PM GMT (Updated: 27 July 2021 4:57 PM GMT)

குன்னூரில் வீட்டுக்குள் காட்டெருமை விழுந்தது.

ஊட்டி

குன்னூர் அருகே நல்லப்பன் தெரு பகுதியில் நேற்று குட்டியுடன் காட்டெருமை நடமாடியது. அங்கு புற்களை மேய்ந்து கொண்டிருந்தபோது, திடீரென தடுமாறி அருகே தன்ராஜ் என்பவரது வீட்டின் மேற்கூரையை உடைத்து கொண்டு காட்டெருமை வீட்டிற்குள் விழுந்தது. 

இதையடுத்து அந்த காட்டெருமையால் வெளியே வர முடியவில்லை. அதன் குட்டி வெளியே தவித்தபடி நின்றது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் வனச்சரகர் சசிகுமார் மற்றும் வனத்துறையிர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குட்டி வெளியே நின்றதால் மீட்பு பணி தாமதமானது. இதற்கிடையில் அங்கு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். 

தொடர்ந்து வனத்துறையினர் வீட்டில் உள்ளவர்களை பாதுகாப்பாக நிற்க வைத்து, வீட்டின் கதவை திறந்து விட்டனர். 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் காட்டெருமை வெளியே வந்து குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றது.

 காட்டெருமை வீட்டுக்குள் சுற்றி வந்ததால், டி.வி. உள்பட உபயோகப் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. மேற்கூரை இடிந்ததால் வனத்துறையினர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story