தொகுப்பு வீடுகளின் பராமரிப்பு பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்


தொகுப்பு வீடுகளின் பராமரிப்பு பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 July 2021 10:27 PM IST (Updated: 27 July 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

முறைகேடு நடப்பதாக கூறி தொகுப்பு வீடுகளின் பராமரிப்பு பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி

முறைகேடு நடப்பதாக கூறி தொகுப்பு வீடுகளின் பராமரிப்பு பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீரமைப்பு பணி

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளையொட்டி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலரின் வீடுகள் மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகும் நிலை உள்ளது. இதை கண்டறிந்து தொகுப்பு வீடுகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் சீரமைப்பு செய்து கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளுக்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

தற்போது தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குன்னூர் வண்டிசோலை ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பசத்திரம் பகுதியில் தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. 

ஒரு வீட்டுக்கு தலா ரூ.50 ஆயிரம் செலவில் 41 வீடுகளை பழுதுபார்த்து சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. மழையின்போது மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகுவது, வீடுகளில் விரிசல் ஏற்பட்ட சுவர்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

தடுத்து நிறுத்தினர்

இந்த நிலையில் நேற்று அப்பகுதி பொதுமக்கள் பழுதடைந்த வீடுகளை சீரமைக்காமல், பயன்பாடு இல்லாமல் கிடக்கும் வீடுகளை சீரமைப்பதாக தெரிவித்தனர். மேலும் சீரமைப்பு பணியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறி தொகுப்பு வீடுகளை சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, 41 வீடுகளை சீரமைக்கும் பணிகள் அரசு நிதியில் நடந்து வருகிறது. பழுதடைந்த வீடுகளை சீரமைக்காமல், நன்றாக உள்ள வீடுகளை சீரமைக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள்  பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, பழுதடைந்த வீட்டை முதலில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றனர்.

Next Story