சங்கு மோதிரம், கண்ணாடி வளையல் துண்டுகள் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறையினர் உற்சாகம்


சங்கு மோதிரம், கண்ணாடி வளையல் துண்டுகள் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறையினர் உற்சாகம்
x
தினத்தந்தி 27 July 2021 5:02 PM GMT (Updated: 27 July 2021 5:02 PM GMT)

ஏரல் அருகே கொற்கையில் நடந்து வரும் அகழாய்வில் சங்கு மோதிரம், கண்ணாடி வளையல் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஏரல்:
கொற்கையில் சங்கு மோதிரம், கண்ணாடி வளையல் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தோண்ட, தோண்ட பொருட்கள் கிடைப்பதால் தொல்லியல் துறையினர் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

அகழாய்வு பணி

பண்டைய தமிழர்களின் நாகரிகத்தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர், ஏரல் அருகே உள்ள சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
கொற்கையில் 17 குழிகள் தோண்டப்பட்டு, தொல்லியல் துறை இயக்குனர் தங்கதுரை தலைமையில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஏற்கனவே மண்பாண்ட பொருட்கள், ஏராளமான சங்குகள், திரவப்பொருட்கள் வடிகட்டும் 9 அடுக்கு குழாய்கள், முழு பானை, ஓடுகள், 10 அடுக்கு செங்கல் கட்டிடம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. 

சங்கு மோதிரம்

தொடர்ந்து அங்கு அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சங்குகளால் செய்யப்பட்ட மோதிரம், வளையல் துண்டுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், கண்ணாடி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. சங்கு மோதிரம் கிடைத்து இருப்பதால் இங்கு சங்கு அறுக்கும் தொழிற்சாலை இருந்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அங்கு தோண்ட தோண்ட பல பொருட்கள் கிடைத்து வருவதால் தொல்லியல் துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Next Story