வாழைகளை காப்பாற்ற புதிய நுட்பம்
குடிமங்கலம் பகுதியில் பலத்த காற்றிலிருந்து வாழைகளை காப்பாற்ற சொட்டுநீர்ப் பாசனக்குழாய்களை பயன்படுத்தி புதிய நுட்பத்தை விவசாயி ஒருவர் செயல்படுத்தி வருகிறார்.
போடிப்பட்டி
குடிமங்கலம் பகுதியில் பலத்த காற்றிலிருந்து வாழைகளை காப்பாற்ற சொட்டுநீர்ப் பாசனக்குழாய்களை பயன்படுத்தி புதிய நுட்பத்தை விவசாயி ஒருவர் செயல்படுத்தி வருகிறார்.
வாழை சாகுபடி
குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் வாழை சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது வாழை மரங்கள் என்ன ஆகும் என்று கேட்குமளவுக்கு தற்போது உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. எனவே பலத்த காற்றிலிருந்து வாழை மரங்களை பாதுகாப்பது விவசாயிகளுக்கு சவாலான விஷயமாக உள்ளது.
இந்தநிலையில் பாசனத்துக்கு பயன்படுத்தும் நவீன தொழில் நுட்பமான சொட்டுநீர்ப் பாசனத்தையே வாழைகளுக்குப் பாதுகாப்பாகவும் மாற்றும் புதிய யுக்தியை விவசாயி ஒருவர் பயன்படுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது
ஆண்டுப் பயிரான வாழை சாகுபடியில் சிரமமான காலகட்டங்களை கடந்தாக வேண்டியது கட்டாயமாகும். ஏனென்றால் பலத்த மழைக்காலம் மற்றும் ஆடிக் காற்று போன்றவை வாழை மரங்களுக்கு சவால் விடுக்கக் கூடிய காலகட்டங்களாகும்.
தண்ணீர் பற்றாக்குறை
பொதுவாக இந்த பருவங்களில் வாழை குலை தள்ளாத அளவுக்குத் திட்டமிட்டே நடவுப் பணிகளை மேற்கொள்வோம். அதையும் தாண்டி வாழைமரங்களுக்கு பல வழிகளில் பாதுகாப்பு வழங்குவது வழக்கமாகும். அந்தவகையில் வாழைத் தோட்டத்தை சுற்றி வேலிப்பயிராக அகத்தி உள்ளிட்ட காற்றைத் தடுக்கும் விதமான மரங்களை வளர்க்கலாம். மேலும் வாழையில் பூ விட்டு குலை வரும் நேரத்தில் சவுக்கு கம்புகளால் முட்டுக் கொடுக்க வேண்டும். அத்துடன் கயிறுகளை கொண்டு வாழைகளை ஒன்றோடொன்று இணைத்துக் கட்டி வரிசையின் இருபுறமும் பக்கவாட்டில் இழுத்துக் கட்டுவோம்.
இவ்வாறு பல அடுக்கு பாதுகாப்பையும் தாண்டி சூறைக்காற்று, சுழல் காற்று போன்றவை மட்டுமே சேதத்தை உருவாக்க முடியும். இல்லாவிட்டால் சற்று பலமான காற்று வீசினால் வாழை மரங்கள் முறிந்து சேதம் ஏற்படும். தற்போது தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இந்த பகுதியில் சொட்டு நீர்ப்பாசனத்தில் வாழை சாகுபடி செய்துள்ளோம். பொதுவாக இளம் பருவத்தில் காற்றின் வேகத்தால் வாழைகள் முறிவது அபூர்வமாகவே நடக்கும். என்றாலும் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான வாழைகள் முறிந்து சேதத்தை அனுபவித்த அனுபவத்தால் இளம் வாழைகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கென தனியாக செலவு செய்யாமல் சொட்டுநீர்க் குழாய்களையே ஒவ்வொரு வாழையையும் இணைத்து சுற்றி அமைத்துள்ளேன். இதனால் பாசனத்துக்கு பாசனமுமானது.அதேநேரத்தில் காற்றிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.சொட்டுநீர்ப் பாசனத்தையே புதிய நுட்பத்தால் பாதுகாப்புக் கயிறாக மாற்றியுள்ள விவசாயியின் செயலை மற்ற விவசாயிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
Related Tags :
Next Story