குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழா வருகிற 3-ந் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
முத்தாரம்மன் கோவில்
தசரா திருவிழாவில் இரண்டாவது இடம் வகிக்கும் பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழா ஆண்டுதோறும் சிறிய தசரா திருவிழா போன்று வெகுவிமரிசையாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவலையொட்டி 144 தடை உத்தரவு இருந்ததால் ஆடிக்கொடை விழா மற்றும் பிரசித்திப்பெற்ற தசரா திருவிழாவிற்கு பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. வழக்கம் போல் கோவிலுக்குள் மட்டும் விழா நிகழ்ச்சிகள் நடந்தன.
கால்நடுதல் நிகழ்ச்சி
இந்த ஆண்டு வழக்கம் போல் ஆடிக்கொடை விழா நடைபெறும் என பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவில் பாதித்ததால் தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அதேசமயம் ஆடிக்கொடை விழாவை முன்னிட்டு நேற்று காலை 8.30 மணிக்கு கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. முத்தாரம்மன் மற்றும் ஞான மூர்த்தீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து கோவில் வளாகத்தில் கால் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் குலவையிட்டு ஓம் காளி, ஜெய்காளி என கோஷமிட்டனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதில் கோவில் செயல் அலுவலர் கலைவாணன், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கொடை விழா
இரவு 8.30 மணிக்கு முளைபாலிகை இடுதல் நிகழ்ச்சி நடந்தது. வருகிற 2-ந் தேதி இரவு 8.30 மணிக்கு மகாகாப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 9.15 மணிக்கு வில்லுப்பாட்டு, 11 மணிக்கு மேல் சாஸ்தா பிறப்பு, தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது. ஆடிக்கொடை விழாவின் முக்கிய நாளான 3-ந் தேதி காலை அபிஷேக அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு மேல் அபிஷேக அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து கும்பம் எழுந்தருளி கோவில் உள்பிரகாரம் சுற்றி வருதல், மாலை 5.30 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவு 10.30 மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, கும்பம் மற்றும் தீச்சட்டி புறப்படுதல் கோவில் உள்பிரகாரம் சுற்றிவந்து கோவிலில் கும்பத்தைச் சேர்த்து படப்பு தீபாராதனையும் நடக்கிறது.
வருகிற 4-ந் தேதி காலை 6 மணிக்கு முளைப்பாலிகை தீர்த்தத்தில் கரைத்தல், மதியம் 1 மணிக்கு மேல் அலங்கார தீபாராதனை, கும்பம் புறப்பட்டு கோவில் உள்பிரகாரம் சுற்றி வந்து மஞ்சள் குளித்தல், தீபாராதனை நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது.
பக்தர்களுக்கு அனுமதியில்லை
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் கலைவாணன் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் இந்த ஆண்டு நடைபெறும் ஆடிக்கொடை விழா வருகிற 3-ந் தேதி நடக்கிறது. ஆனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், உபயதாரர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் வளாகத்தில் மட்டும் கும்பம் எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும். நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளிக்க யூடிப் சேனல் மற்றும் உள்ளுர் டி.வி.களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். எனவே அனைவரும் அரசின் அறிவிப்புக்கு இணங்க வருகிற 3-ந் தேதி மட்டும் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.
Related Tags :
Next Story