கெலமங்கலம் அருகே பரபரப்பு வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை நண்பர் கைது


கெலமங்கலம் அருகே பரபரப்பு வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை நண்பர் கைது
x
தினத்தந்தி 27 July 2021 10:55 PM IST (Updated: 27 July 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலம் அருகே வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வடமாநில தொழிலாளி
ஒடிசா மாநிலம் ஜினாகார்த் மாவட்டத்தை சேர்ந்தவர் திகாம்பர் பேக் (வயது 39). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பைரமங்கலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜ்பகதூர் சிங் (49) மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த மிண்டுகுமார் சிங் (43) ஆகியோர் வேலை செய்து வருகிறார்கள். 
நண்பர்களான திகாம்பர் பேக்கும், ராஜ்பகதூர் சிங்கும் பைரமங்கலத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி தினமும் வேலைக்கு சென்று வந்தனர். கடந்த 25-ந் தேதி நள்ளிரவு திகாம்பர் பேக்கும், ராஜ்பகதூர் சிங்கும் அறையில் மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 
துடிதுடித்து சாவு
இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்பகதூர் சிங் இரும்பு கம்பியால் திகாம்பர் பேக்கின் தலையின் பின்புறம் மற்றும் நெஞ்சு பகுதியில் அடித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து ராஜ்பகதூர் சிங் அறையை வெளிப்புறமாக பூட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜ்பகதூர் சிங் தனது மற்றொரு நண்பரான மிண்டுகுமார் சிங்கை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது  இரவு மது போதையில் எனக்கும், திகாம்பர் பேக்கிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் நான் இரும்பு கம்பியால் அவனை அடித்து விட்டேன். மேலும் வீட்டின் கதவை நான் வெளிப்புறமாக பூட்டி விட்டு வந்து விட்டேன் என்றார்.
நண்பர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த மிண்டுகுமார் சிங் இதுபற்றி கட்டிடத்தின் உரிமையாளருக்கும், கெலமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது ரத்த காயங்களுடன் திகாம்பர் பேக் பிணமாக கிடப்பது ெதரிந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜ்பகதூர் சிங்கை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடமாநில தொழிலாளியை குடிபோதையில் நண்பரே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது.

Next Story