ஜனாதிபதி, கவர்னரை உருவாக்கிய பல்கலைக்கழகத்தை விமர்சிப்பதா?


ஜனாதிபதி, கவர்னரை உருவாக்கிய பல்கலைக்கழகத்தை விமர்சிப்பதா?
x
தினத்தந்தி 28 July 2021 12:01 AM IST (Updated: 28 July 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி, கவர்னரை உருவாக்கிய வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தை விமர்சிப்பதா? என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம், 

விழுப்புரத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, தற்போதைய தி.மு.க. அரசு சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்லைக்கழகத்துடன் இணைத்து, கூட்டு பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும் என்று அறிவித்தது. இந்த முடிவுக்கு அண்ணாமலை பல்லைக்கழகம் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், அ.தி.மு.க. தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வலுத்துள்ளது. 
இந்நிலையில், விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூடும் தமிழக அரசையும்,  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்தும் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நாட்டிலேயே மோசமானது

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் எனவும், அங்கு தகுதி இல்லாதவர்கள் பேராசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நாட்டிலேயே மோசமான பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதா? என்று கடுமையாக சாடினார். அவரது பேச்சுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து எதிர்ப்பு வலுத்துள்ளது.  

கண்டன ஆர்ப்பாட்டம்

நேற்று காலை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு திரண்ட ஊழியர்கள், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஊழியர் சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பழனிவேல், பொருளாளர் தவச்செல்வன், இணை பொதுச் செயலாளர் புண்ணியமூர்த்தி, இணை பொருளாளர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். 

வரலாற்று சிறப்புமிக்கது

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் ஊழியர் சங்க நிர்வாகிகள் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். 
அப்போது அவர்கள் கூறியதாவது:-
உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகம் என்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் பெயர் எடுத்துள்ளது. இதற்காக ஆசிரியர்கள், ஊழியர்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி வாயிலாகவும், நேரடியாகவும் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 
வரலாற்று சிறப்புமிக்க இந்த பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன், முன்னாள் கவர்னர் அலெக்சாண்டர் மற்றும் மிகச் சிறந்த தலைவர்கள், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பல்கலைக்கழத்தில் படித்து இருக்கிறார்கள். பல சிறந்த கல்வியாளர்களை உருவாக்கிய பல்கலைக்கழகம் தான் அண்ணாமலை பல்கலைக்கழகம்.
 இந்த பல்கலைக்கழகத்தை பற்றி அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இனி வரும் காலங்களில் இது போன்ற விமர்சனங்களை சி.வி.சண்முகம் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

மற்றொரு ஆர்ப்பாட்டம்

இதேபோல் நேற்று காலை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் அருகே அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் ஊழியர் சங்க நிர்வாகிகள், சங்க பொதுச் செயலாளர் ரவி தலைமையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை பற்றி அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் ஷியாம் சுந்தர், ஜான், மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டத்தால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஆராய்ச்சி தரத்தில் உலக அளவில் 23-வது இடத்திலும், தேசிய அளவில் 13-வது இடத்திலும், தமிழக அளவில் 3-வது இடத்திலும் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. அறிவியல் தரத்தில் இந்த பல்கலைக்கழகம் தமிழகத்தில் முதல் இடத்தில் செயல்பட்டு வருகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தை பற்றியும், அதில் பணிபுரியும் ஆசிரியர்களை பற்றியும் தரக்குறைவாக பேசி உள்ளார். அவருக்கு எங்கள் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story