நாமக்கல்லை கொத்தடிமை தொழிலாளர்முறை இல்லாத மாவட்டமாக்க ஒத்துழைக்க வேண்டும்-கலெக்டர் ஸ்ரேயாசிங் வேண்டுகோள்
நாமக்கல்லை கொத்தடிமை தொழிலாளர்முறை இல்லாத மாவட்டமாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
நாமக்கல்:
கண்காணிப்புக்குழு கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமை தொழிலாளர்முறை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து தொழில் நிறுவனங்களிலும் கொத்தடிமை தொழில் முறை உள்ளதா? என்பதை கண்காணிக்க தொடர் கூட்டாய்வுகளை அரசுதுறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழங்குகளை துரிதமாக முடிக்க வேண்டும்.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினர் கொத்தடிமை தொழிலாளர் முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் புகார் தெரிவிக்க வசதியாக மாநில கட்டுப்பாட்டு மைய இலவச தொலைபேசி எண் 1800 4252 650 விவரத்தினை அனைத்து நிறுவனங்களிலும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒத்துழைக்க வேண்டும்
மேலும், மீட்கப்பட்ட தொழிலாளர்களின் மறுவாழ்வினை தொடர்ந்து கண்காணித்து, அரசுத்துறை நிவாரணங்கள் அவர்களுக்கு சென்றடைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தினை கொத்தடிமை தொழிலாளர் முறை இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சங்கர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகனசுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மரகதவள்ளி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story