பரமத்திவேலூர் அருகே நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல்


பரமத்திவேலூர் அருகே நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 July 2021 12:03 AM IST (Updated: 28 July 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பரமத்திவேலூர்:
பணியாளர்கள்
பரமத்திவேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர், எல்லைமேடு, கூடுதுறை, மங்கலமேடு, எல்லைமேடு, கட்டமராபாளையம்புதூர் மற்றும் ஓலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று அவர்கள் வேலைக்கு சென்றபோது, பணித்தள பொறுப்பாளர் கோகிலா ரூ.100 பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பணம் கொடுத்தால் தான், பணிக்கு வந்ததாக கணக்கு காட்டப்படும் எனவும், இல்லையேல் கணக்கில் சேர்க்க படாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சாலை மறியல்
தொடர்ந்து அவர்கள், பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் ஏற்பட்டது. இந்த மறியல் குறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ரணவீரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் (பொறுப்பு) மற்றும் மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பணித்தள பொறுப்பாளர் மீது தொழிலாளர்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சமாதானம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை சீரமைத்தனர்.

Next Story