நாமக்கல் மாவட்டத்தில் 2-வது கட்டமாக அதிரடி சோதனை: 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்-10 பேர் கைது


நாமக்கல் மாவட்டத்தில் 2-வது கட்டமாக அதிரடி சோதனை: 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்-10 பேர் கைது
x
தினத்தந்தி 27 July 2021 6:33 PM GMT (Updated: 27 July 2021 6:33 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 2-வது கட்டமாக நடந்த அதிரடி சோதனையில் 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்:
புகையிலை பொருட்கள்
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருப்போர், விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து போலீசார் கைது செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டத்தில் 36 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2¾ டன் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 2-வது கட்டமாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் நாமக்கல் மற்றும் மோகனூர் பகுதிகளில் 1,300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக நாமக்கல்லை சேர்ந்த அசோக்குமார் (வயது 22), ரமேஷ் (31), விமல்ராஜ் (36), விஜயராகவன் (41), காந்திலால் (35) மற்றும் மோகனூரை சேர்ந்த ஸ்ரீதர் (24), புஷ்பராஜ் (41) என 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலையில் வீச்சு
இதேபோல் பரமத்திவேலூர், பாண்டமங்கலத்தில் போலீசாரின் சோதனையில் 150 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிக்கின. இதுதொடர்பாக பாண்டமங்கலத்தை சேர்ந்த கண்ணன் (35), தினேஷ்குமார் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், பரமத்திவேலூர் திருவள்ளூர் சாலையில் புகையிலை பொருட்களை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
ராசிபுரம் சின்னக்கடை வீதியில் உள்ள ஒரு கடையில் 125 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த லட்சுமி தேவி, நாமக்கல்லை சேர்ந்த பொன்னுசாமி ஆகியோரை தேடி வருகின்றனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டியில் மளிகை கடை ஒன்றில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 5 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக மளிகை கடை உரிமையாளர் கதிரேசன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். 
1½ டன் பறிமுதல்
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 1½ டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story