தீக்குளித்து பெண் தற்கொலை; காப்பாற்ற முயன்ற மகனும் சாவு


தீக்குளித்து பெண் தற்கொலை; காப்பாற்ற முயன்ற மகனும் சாவு
x
தினத்தந்தி 28 July 2021 1:34 AM IST (Updated: 28 July 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

மது பழக்கத்தை மகன் கைவிடாத வேதனையில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற மகனும் பரிதாபமாக இறந்தார்.

மதுரை,ஜூலை
மது பழக்கத்தை மகன் கைவிடாத வேதனையில் தீக்குளித்து பெண்  தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற மகனும் பரிதாபமாக இறந்தார்.
மதுப்பழக்கம்
மதுரை அனுப்பானடி ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வேசுவரி (வயது 65). இவருக்கு 2 மகன்கள்.
மூத்த மகன் சதீஷ்குமார் திருமணம் முடிந்து குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். 2-வது மகன் அருண் சக்கரவர்த்தி (28). இவருக்கு மதுப்பழக்கம் உள்ளது.
திருமணம் செய்து வைத்தால் மகன் திருந்தி விடுவான் என்று நினைத்து செல்வேசுவரி அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் அவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனைவி அவரை விட்டு பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.
தீக்குளிப்பு
எனவே செல்வேசுவரி மூத்தமகன் கொடுக்கும் பணத்தில்தான் வாழ்ந்து வந்துள்ளார். 
மதுவுக்கு அடிமையான தனது 2-வது மகனை திருத்த முடியாத மன வேதனையில் செல்வேசுவரி தவித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மது குடிக்க பணம் கேட்டு அருண்சக்கரவர்த்தி தனது தாயாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த செல்வேசுவரி மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
இருவரும் பரிதாப சாவு
தனது கண் முன்னே தாயார் தீயில் எரிவதை கண்ட அருண்சக்கரவர்த்தி அவரை காப்பாற்ற முயன்றார். இதில் அவர் உடலிலும் தீ பரவியது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டினர் ஓடிவந்தனர்.
அங்கு தீயில் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையில் நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் தாய்-மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story