தமிழ் வழியில் படித்தவருக்கு சப்இன்ஸ்பெக்டர் பணி -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்வழியில் படித்தவருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணி வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை, ஜூலை
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார், மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது குடும்பத்தில் முதல் பட்டதாரியான நான், பள்ளிப்படிப்பு மற்றும் இளங்கலை பட்டப்படிப்பை தமிழ் வழியில் முடித்து உள்ளேன். 2019-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு அறிவிப்பு வெளியானது. இதற்கான எழுத்து தேர்வில் 50 மதிப்பெண் பெற்றேன். உடல் தகுதி தேர்வில் 12 மதிப்பெண் எடுத்தேன். ஆனால் நேர்முகத்தேர்வுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எனக்கு தகுதியிருந்தும் அழைக்கப்படவில்லை. இதேபோல கடந்த காலங்களில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வின்போதும் தமிழ் வழி இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
இது சம்பந்தமாக நான் தாக்கல் செய்த மனுவை மதுரை ஐகோர்ட்டு தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். உரிய முறையில் எனது மனுவை தனி நீதிபதி விசாரிக்கவில்லை. எனவே தமிழ்வழி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான நேர்முகத்தேர்வில் என்னை பங்கேற்க அனுமதிக்கவும், எனக்கு ஒரு இடத்தை ஒதுக்கி வைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
அதன்படி இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரை நேர்முகத்தேர்வில் அனுமதிக்கவும், ஒரு இடத்தை ஒதுக்கி வைக்கவும் வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி அவர் உரிய தேர்வுகளில் பங்கேற்று தகுதியடைந்தார்.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மனுதாரர் உரிய தகுதிகளை பெற்று இருப்பதை உறுதி செய்ய முடிகிறது. எனவே மனுதாரருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story