கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் மறியல்


கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் மறியல்
x
தினத்தந்தி 28 July 2021 1:58 AM IST (Updated: 28 July 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

தா.பழூர்:

நெல் கொள்முதல் நிலையம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நவரை பட்ட நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மூன்று போகம் விவசாயம் செய்யும் விவசாயிகள், அவர்கள் விளைவித்த நெல்மணிகளை அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்காக டெல்டா பாசன பகுதியான தா.பழூர் வட்டாரத்தில் தா.பழூர், கோடாலிகருப்பூர், முத்துவாஞ்சேரி, ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம் உள்ளிட்ட 12 இடங்களில் சம்பா பருவத்திலும், கோடாலிகருப்பூர், ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, முத்துவாஞ்சேரி ஆகிய இடங்களில் குருவை மற்றும் நவரை பட்டங்களிலும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம்.
குவியல், குவியலாக நெல்மணிகள்
இந்நிலையில் தற்போது நெல் அறுவடை தொடங்கி சுமார் 40 சதவீதம் நவரை பட்ட அறுவடை நிறைவு பெற்ற நிலையில் இதுவரை தா.பழூர் வட்டாரத்தில் ஒரு நெல் கொள்முதல் நிலையம் கூட திறக்கப்படவில்லை. தொடர்ந்து அரசு அதிகாரிகளிடமும், ஆட்சியாளர்களுக்கும் மனு அளித்தும் இதுவரை நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு எந்த நடவடிக்கையையும் அரசு தரப்பில் இருந்து எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் விலை குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று இடைத்தரகர்களிடம் நெல்மணிகளை விற்க விவசாயிகள் முயன்ற நிலையில், தற்போது அவர்களும் நெல் கொள்முதல் செய்ய முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து வேறு வழியில்லாத விவசாயிகள், வழக்கமாக நவரை பட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் இடங்களான கோடாலிகருப்பூர், காரைக்குறிச்சி, ஸ்ரீபுரந்தான், முத்துவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்த நெல் மணிகளை குவியல், குவியலாக மலைபோல் குவித்து வைத்துள்ளனர்.
சாலை மறியல்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால், நெல்மணிகளை மழையில் நனையாமல் காப்பாற்றுவதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கோடாலிகருப்பூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று சாலையில் நெல் மூட்டையை வைத்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த தா.பழூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு வந்த வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வனிடம், நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி மனு கொடுத்த விவசாயிகள், மீண்டும் கொள்முதல் நிலையம் திறக்க காலதாமதம் செய்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர். இது பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் ஆய்வாளர், விவசாயிகளிடம் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது.
விக்கிரமங்கலம்
இதேபோல் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தை சுற்றியுள்ள சாத்தாம்பாடி, குணமங்கலம் போன்ற ஊர்களில் உள்ள விவசாயிகள் தற்போது மின் மோட்டார் ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில் இருந்து தண்ணீர் பெற்று குறுவை நெல் சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளனர். அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை முத்துவாஞ்சேரி அரசு நேரடி கொள்முதல் நிலையம் அருகே மற்றும் சாலை ஓரங்களில் கொட்டி வைத்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாதுகாத்து வருகின்றனர். ஆனால் அரசு நேரடி கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படவில்லை.
பலமுறை அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும், கோரிக்கை விடுத்தும் கொள்முதல் நிலையத்தை திறக்க எவ்விதமான நடவடிக்கையும் இல்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் கொள்முதல் நிலையத்தை திறக்க அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, முத்துவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே நெல்மணிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சக்கரவர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதன்பேரில், மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அரியலூர் -ஸ்ரீபுரந்தான் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story